Tuesday, May 24, 2011

ஒரு கொடூர கொடுமையின் அழகான பதிவு - தமிழீழ நாதன்


என்னை பொறுத்தவரை அந்த புத்தகத்தை பற்றி சொல்ல வேண்டுமானால் "ஒரு அடர்ந்த சோகத்தை தொடர்ந்து
தாங்கிவரும் ஒரு சலனமற்ற நீரோடையின் ஓட்டமாக இருகின்றது". இன்னும் இயல்பாக சொல்லவேண்டுமானால்
"ஒரு கொடூர கொடுமையின் அழகான பதிவு" என்று சொல்லவேண்டும். ஒரு வரிகூட அலங்கரிக்க படாத எதார்த்தம் கொண்ட இயல்புத்தன்மை மாறாத தெளிவான சிந்தனைபதிவு.  

குருதிப் பெருக்கில் நனைந்த என் எழுதுகோல்... என்று தொடங்கும் முகப்பு மிகவும் சிறப்பு.  

இவர்களால்... இதுவரையில்... நான்... என்று தொடங்கும்போது ஒரு மிகப்பெரிய சோகத்தை... ஒரு வலியை இதயம் ஏற்க்கப்போகிறது என்ற எச்சரிக்கை தெரிகிறது.

பால் நியூமன் சொல்லுயிருக்கும் மார்டின் லூதர் கிங் உடைய செய்தி இதயத்தில் ஊசி ஏற்றுவதுபோல் அமைந்து இருகின்றது.  

விழிநீர் துடைக்கின்ற விரல்களைத் தேடி...   உலகின் நெடுநாள் அன்பும் ஆதரவும் சமுக இணைப்பும் இல்லாமல் தவிக்கும்
அண்ணன் இராபர்ட் பயாஸ் அவர்களின் மொத்த சோகத்தையும் தலைப்பிலேயே  சொல்லிவிட்டதுபோல இருகின்றது.
அதே பகுதியில்

11  ஆம் பக்கத்தில் பக்கத்தில் "உண்மையின் வெளிச்சத்தில் இருந்து தப்பிக்க முடியாத இருட்டாகும்"  என்ற சொல்லாடல் மிகவும் சிறப்பு. அதேபக்கத்தில் இறுதியில்  இராபர்ட் பயாஸ் அவர்களின் குழந்தையை கொன்றவிதத்தை பதிவு செய்து இருக்கும் விதம் இதயத்தை பிளப்பதாக அமைந்து இருகின்றது.

13 ஆம் பக்கத்தில் இறுதியில் இராபர்ட் பயாஸ் அண்ணன் "தான் மகனை பறிகொடுத்த ஒரு தந்தையின் மனதில் இயல்பாக எழும் துயரை மறைத்து, மிஞ்சியிருக்கும் என் குடும்பத்தின் எதிர்காலத்தை நினைத்து நான் உயிர்வாழ எண்ணியதுதான் மாபெரும் தவறு. என் மகனோடு நானும்போயிருக்கவேண்டும்" என தன்னை நொந்துகொள்ளும் போது என்னால் அழாமல் இருக்கமுடியவில்லை.  

14  ஆம் பக்கத்தில் பழமொழிக்கு அண்ணன் இராபர்ட் பயாஸ் மனநிலையில் இருந்து சொன்ன புது விளக்கம் நீதித்துறையை கண்ணத்தில் அறைந்ததுபோல் இருந்தது.

16  ஆம் பக்கத்தில் " இயற்க்கை மனிதன் தான்கிகொள்ளும் அளவிற்கே துன்பத்தை அளிகின்றது" என்று கூறும் இடத்தில் என்னால் தாங்கிக்கொள்ள முடியாத அளவிக்கான சோகம் குடிகொண்டது மனதில்.

17  ஆம் பக்கத்தில் சொல்ல பட்ட "வெளியே கொடூரமான இரவு துளித்துளியாய் விடிந்து கொண்டிருந்தது" என்று இரவு இராபர்ட் பயாஸ் அனுபவித்த கொடுமைகள் அனைத்தையும் ஒற்றை வாக்கியத்தில் சொல்லியிருக்கின்றது.

21  ஆம் பக்கத்தில் "உண்மையை கேட்பதற்கு ஒரு செவிகள் இல்லை ஆனால் பொய்யினை பரப்புவதற்கு ஆயிரம் உதடுகள் இருக்கின்றது" என்று சொல்லும் போது மொத்த சமூக அவலங்களையும் கோடிட்டு காட்டியுள்ளது.

26  ஆம் பக்கத்தில் சொல்லி இருக்கின்ற இராபர்ட் பயாஸ் அண்ணன் தனக்குள் கோங்கிய நாயமான கோபத்தை தனக்குள்ளாகவே அடக்கிகொண்ட விதம் ஒரு நாதியற்ற மனிதனின் அவனுக்குள்ளாகவே வன்மமாவதை உணரமுடிகின்றது.

28  ஆம் பக்கத்தில் சொல்லி இருக்கின்ற " மதிப்பிற்குரிய ஊடக துறை நண்பர்களே நீங்கள் அறிந்துகொள்ள விரும்புவது, தெரிந்துகொள்ள துடிப்பது செய்திகளையா ? உண்மைகளையா ?"   என்ற எனக்குள் நானே பலமுறை கேட்டுக்கொண்ட
கேள்விகள்.

33  ஆம் பக்கத்தில் கடுமையான வலிகளோடு கடத்தவேண்டிய இரவின் கொடுமைக்காக தனது அழகிய குடும்பத்தை
இராபர்ட் பயாஸ் நினைத்து கொள்ளுவது கண்களில் கண்ணீரையும், இதயத்தில் மூர்க்கத்தையும் என்னுள் ஏற்ப்படுத்தியது.

35  ஆம் பக்கத்தில் சொல்லப்பட்ட "தானாக அகப்பட்டதை இம்சித்து கொள்"   அருமையான தேர்வு.

36  ஆம் பக்கத்தில் " என்மகனை எப்போதாவது யாராவது காண நேர்ந்தால், அவன் விழிகளை உற்று பாருங்கள் அதில் வடியும் ஏக்கத்தை யாராலும் ஈடு செய்யமுடியாது"    ஒரு
தந்தையிடம் இருக்கும் தாய்மையின் பிரிவின் ஏக்கங்கள் கண்களை குளமாக்குகிறது.

37  ஆம் பக்கத்தில் " சிறைவாழ்க்கை என்பது .... எல்லாவித இயற்க்கை சமன்பாடுகளையும் கலைத்து போடும்
தண்டனையாக இருகின்றது" எனக்கூறும் போது அங்கே இளைக்க படும் கொடுமைகளை உணரமுடிகின்றது.

39  ஆம் பக்கத்தில் துவக்கத்தில் சொல்லி இருக்கின்ற " சலமில்லாமல் ஒரு கற்சிலைபோல்... என்னை சுற்றி வார்த்தைகள் பூசிகளைப்போல் பறந்து கொண்டிருந்தது"   இந்த புத்தகத்தை படித்த நேற்று எனது இரவும் இப்படித்தான் இருந்தது.

42  பக்கத்தில் " உலர்ந்த தூரிகைகளில் இன்னும் வரையப்படாத ஓவியங்கள் .... தலைப்பு மற்றும் தீபசெல்வன் அவரளின் வாசக தேர்வு சிறப்பு.

45  ஆம் பக்கத்தில் இராபர்ட் பயாஸ்  அண்ணன் அவர்கள் சீமான் படத்தை வரைந்து மாடியிருக்க்கின்றேன் என்றும் அதற்க்கான காரணத்தை சொல்லும் போது எனது அறையில் வைத்து இருக்கும் இரண்டு அண்ணன்களின் படமும் ( தேசிய தலைவர் + அண்ணன் சீமான் ) கண்ணீர் மறைத்த கண்களோடு பார்த்தேன்.

46  ஆம் பக்கத்தில் "அறிவுரைகழகம்" என்பதன் சுயரூபத்தை தோலுரித்த விதம் மிகவும் அருமை.

முரண்களும்... உண்மைகளும்  கீழ் உள்ள அனைத்து கூற்றுகளும் மிக தெளிவாக சட்டம்தெரியாத பாமரகளும் புரிந்துகொள்ளும்படியாக இருகின்றது.

60  பக்கம் தொடங்கும் " உள்ளத்தில் இருந்து உண்மையாய்  சில உணர்வுகள்...

இதன்கீழ் சொல்லப்பட்ட அனைத்தும் ஒரு மனித மனம் சுமந்த இரணத்தின் வெளிப்பாடு, இந்த சமுதாயம் ஒருவனுக்க அளித்த இரணங்களை தனக்குத்தானே ஜீரணித்து கொள்கின்ற விதம், இதனையும் தாண்டி ஒரு இனமானம் மிக்க மனிதன் தன்னை சார்ந்த சமூக உறவுகளிடத்தில் நோக்கும் எதிர்பார்ப்பு என முடிகின்றது.

கவித்துவம் நிறைந்த சொல்லாடல், உண்மையை சமூக எதார்த்த நிகழ்வோடு கனமாக பதிவு செய்து இருக்கும் விதம் என அனைத்தும் அருமை.

அரசியல் வழக்குகளில் தடா சட்டம் என்பது ஒரு விதமான சர்வாதிகாரமுறை என்பதை மிகவும் தெளிவாக சொல்லப்பட்டிருக்கின்றது

உண்மையில் இந்த புத்தகம் படித்த இரவு எனக்குள் ஏற்ப்பட்ட உளவியல் மாற்றத்தை சொல்லமுடியவில்லை.

படித்து முடித்த நேற்று இரவு கண்ணீர் சுமந்த எனது கண்கள் உறங்க மறுத்து விட்டது. சோகம் சுமந்த எனது இதயம், அதன் கட்டுபாட்டில் செயல்படும் வயிறு உணவு உன்ன மறுத்துவிட்டது. உண்மையில் 2009  இறுதி யுத்தத்தின்போது எனது ஆராய்ச்சி மாணவர் விடுதியில் எனது கையறு நிலையை நினைத்து, எனது கண்ணத்தில் நானே  அறைந்துகொண்ட நிகழ்வு நேற்று என்கண்முன் நின்றது.   பசியின் சோர்வையும், கண்ணின் சோகத்தையும் எனது தூக்கம் வெல்வதற்கு விடியல்காலம் ஆகிவிட்டது.

இந்த புத்தகம் அவசியம் தமிழகம் முழுதும் பரவேண்டும். கண்டிப்பாக இந்த புத்தகம் படிப்பவரிடம் ஒரு உளவியல் மாற்றத்தை உருவாக்கும்.


No comments:

Post a Comment