Wednesday, June 15, 2011

இராஜீவ் கொலை - நீதியைக் கொன்ற‌ சி.பி.ஐ-கீற்று நந்தன்


இராஜீவ் காந்தி கொலை தொடர்பாக அண்மையில் இரண்டு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. ஒன்று, சவுக்கு வெளியீடான 'விடுதலைப் புலிகளுக்கு அப்பால் -‍ ராஜீவ் கொலைப் பின்னணி'. மற்றொன்று, களம் வெளியீடான 'விடுதலைக்கு விலங்கு (இந்தியாவின் முன்னாள் பிர‌தமர் இராசீவ் காந்தி கொலை வழக்கு வெளிவராத உண்மைகளும், துயர‌ங்களும்)'. இரண்டும் ஒன்றுக்கொன்று நேரெதிரான கருத்துக்களுடனும், செய்திகளுடனும் வெளிவந்துள்ளன. முந்தைய புத்தகம், சி.பி.ஐ. ‘தயாரித்து’ வைத்த‌ புலனாய்வுக் குறிப்புகளின் அடிப்படையிலும், பிந்தைய புத்தகம் கொலை வழக்கில் கைதாகி, 20 ஆண்டுகளாக சிறையில் வாடும் இராபர்ட் பயஸின் சுயசரிதைக் குறிப்புகளின் பின்னணியிலும் இராஜீவ் காந்தி கொலை வழக்கை அணுகுகின்றது. சவுக்கு வெளியீடு, சிபிஐ சிறப்பு புலனாய்வுக் குழுவினை லேசாக‌ கன்னத்தில் தட்டிவிட்டு, 'வெல்டன் பாய்ஸ்' என்று உச்சி முகர்ந்து பாராட்டுகிறது. இரண்டாவது புத்தகம், சிபிஐ புலனாய்வுக் குழுவின் அராஜகமான, மனிதத் தன்மையற்ற விசாரணை முறைகளின் மீது காரி உமிழ்கிறது.
ஒன்று, கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் உண்மைக் குற்றவாளிகள் என அவர்கள் மீது, வழமையான போலீஸ் ஜோடனைக் கதைகளை மிகவும் சுவாரசியமாக (எந்த வெட்கமும் இன்றி) விவரித்துச் செல்கிறது. மற்றொன்று, ஈழத்தில் பிறந்ததையன்றி ஒரு குற்றமும் செய்யாத - அந்த ஒரு காரணத்திற்காகவே ஒரு ஈழத் தமிழரும், அவரது சொந்தங்களும் அனுபவிக்கும் கடுந்துயரங்களை மிகுந்த வலியுடன் பதிவு செய்கிறது. முதல் புத்தகத்திற்கு சிபிஐ முன்னாள் இயக்குனர் விஜய்கரன் முன்னுரை எழுதியிருக்கிறார். களம் வெளியீட்டிற்கு பத்திரிக்கையாளர் அய்யநாதன், நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான், மனித உரிமையாளர் பால் நியூமென் ஆகியோர் முன்னுரை எழுதியிருக்கிறார்கள்.
சவுக்கு வெளியீடு, இந்தியாவை வல்லரசாக்க வந்த மகத்தான தலைவனாக இராஜீவ் காந்தியை பெருமிதத்துடன் புகழ்கிறது. களம் வெளியீடு, இந்திய அமைதிப் படையை அனுப்பி, ஈழத்தில் இராஜீவ் காந்தி நடத்திய கொலைவெறியாட்டத்தைப் பதிவு செய்கிறது. 'சிரமறுத்தல் வேந்தருக்குப் பொழுதுபோக்கும் சிறிய கதை' என்பதை முதல் புத்தகமும், 'நமக்கு எல்லாம் உயிரின் வாதை' என்பதை இரண்டாவது புத்தகமும் பேசுகின்றன. ராஜீவ் சர்மா எழுதிய புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தைப் புரட்டும்போதும், நமக்கு அடக்கமாட்டாத எரிச்சலும், எழுதியவனின் குரல்வளையை முறிக்கத் தூண்டும் கோபமும் ஏற்படுகிறது. இராபர்ட் பயஸின் தரப்பு நியாயத்தைப் பேசும் புத்தகத்தைப் புரட்டும்போது, அடக்க முடியாத கண்ணீரும், இத்தனை ஆண்டுகளாக அப்பாவிகள் சிறையில் வாடுகிறார்களே என்ற துயரமும் நெஞ்சை அழுத்திக் கொள்கிறது; உண்மையை வெளிக்கொண்டு வந்த வழக்கறிஞர்கள் தடா சந்திரசேகர், மணி.செந்தில் இருவரது கைகளையும் நன்றியுடன் பற்றிக்கொள்ளத் தோன்றுகிறது.
முதலில் சவுக்கு புத்தகத்திலிருந்து இராபர்ட் பயஸ் பற்றிய சிபிஐ குறிப்புகள்...
“...நளினி மற்றும் முருகன் கைது செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு மேலும் இரு முக்கியமான எல்டிடிஈ போராளிகள் எஸ்.ஐ.டி.யின் தேடுதல் வலையில் வீழ்ந்தனர். அந்த இருவர் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 25 வயதுடைய ராபர்ட் பயஸ் மற்றும் தமிழ்நாட்டில் ஜோலார்பேட்டையைச் சேர்ந்த ஜி.பேரறிவாளன் என்ற அறிவு. இலங்கைத் தமிழரான பயஸ் சிவராசன், தனு மற்றும் சுபாவிற்கு தங்குவதற்கான இருப்பிடத்தை தயார் செய்தார். அறிவு, பாக்கியநாதன் மற்றும் பத்மாவுடன் தங்கியிருந்தார்.
சென்னை போரூரில் இருந்த பலசரக்குக் கடை, கொலை நடந்த காலம் வரை இந்தக் கொலைக்குழுவிற்கு, யாழ்ப்பாணம், இத்தாலி, டென்மார்க் மற்றும் கனடாவிலிருந்து வந்த செய்திகளை பரிமாறிக்கொள்ளும் இடமாக பயன்படுத்தப்பட்டது. கொலை நடந்த ஒரு வாரத்திற்குப் பிறகு பயஸிற்கு ஒரே ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. உள்ளூரிலிருந்து வந்த அந்த அழைப்பின்போது பயஸ் மிக மெதுவாகவே பேசினார் என அந்த பலசரக்குக் கடை முதலாளி எஸ்.ஐ.டி.யிடம் தெரிவித்தார். கொலை நடப்பதற்கு ஒருநாள் முன்புவரை பயஸ் வீட்டிற்கு வெளியே ஒரு ஆம்னி வேன் நின்றதை பலநாட்கள் பொதுமக்கள் பார்த்துள்ளனர். அந்த வாகனம் நபர்களை, குறிப்பாக பெண்களை அழைத்துச் சென்றதற்காக பயன்படுத்தப்பட்டது.
அந்தக் கொலைக் குழுவிலிருந்த மற்றொரு நபரான ஜெயக்குமார் ஜூன் 26 அன்று கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாணத் தமிழரான ஜெயக்குமார் சென்னையில் சிவராசன் மற்றும் சுபா தங்குவதற்கு வசதி செய்து தந்தார். ஜெயக்குமார் ராபர்ட் பயஸின் உறவினர் எனப் பின் தெரியவந்தது...”
இப்போது களம் வெளியீடான 'விடுதலைக்கு விலங்கு' புத்தகத்திலிருந்து (களம் வெளியீடு 8, மருத்துமனை சாலை, செந்தில் நகர், சின்னபோரூர், சென்னை - 600 116. விலை ரூ.100) சில பகுதிகள்...
“...காட்டுமிராண்டித்தனமாக என் வீட்டின் உள்ளே நுழைந்த இந்திய இராணுவ வீர‌ர்களின் கர‌ங்களில் பிறந்து பதின்மூன்றே நாட்களான எனது மகன் சிக்கிக் கொண்டான். அன்று மலர்ந்த இளம் ரோஜா ஒன்று, மதம் பிடித்த யானையின் காலடியில் சிக்கிக் கொண்டதைப் போல பந்தாடப்பட்ட எனது பாலகனை இந்திய இராணுவ வீர‌ன் ஒருவன் தூக்கி எறிந்தான். அழுது வீறிட்டபடியே விழுந்த எனது பச்சிளம் பாலகனுக்கு தலையில் பலத்த காயம். தடுக்கப் பாய்ந்த எனது மனைவியையும் எட்டி உதைவிட்டு கீழே தள்ளியது இந்திய இராணுவம். காயம்பட்ட என் பச்சிளம் குழந்தையைக் காப்பாற்ற மருத்துவமனை நோக்கி ஓடினோம். ஆனால் சின்னஞ்சிறு மலர‌ல்லவா, சீக்கிர‌மே உயிரை‌ விட்டுவிட்டது. கொடிய மிருகங்கள் உலவும் காட்டில் எளிய உயிர்களுக்கு இடமில்லை. குண்டு மழை பொழியும் நிலத்தில் சின்னஞ்சிறு அபலை உயிர்களுக்கு மதிப்பில்லை.
உயிர்வாழும் ஆசைதான் எத்தனை விசித்திர‌மானது!.. இந்த வேட்கைதான் காயங்கள் மீது காலம் பூசும் மருந்துக்கு மயிலிறகாக உதவுகிறது. நாங்களும் அப்படித்தான்; உயிர்வாழும் வேட்கை தந்த ஆசை. தடுக்கி விழுந்தால், தாங்கிப் பிடிப்பார்கள் என்று உறவுகள் மீது வைத்த நம்பிக்கை. இந்த இர‌ண்டும் தான் எம்மை தாயகத் தமிழகத்தை நோக்கி விர‌ட்டியது..."
"...குழந்தையை இந்திய இராணுவத்திடம் பறிகொடுத்த ஈழத் தகப்பன் ஒருவன் தான், இராசீவ் கொலையில் சம்பந்தப்பட்டிருக்கிறான் என்று யாரே‌னும் நம்புவீர்கள் என்றால், என்னைப் போன்று பல்லாயிர‌க்கணக்கான தகப்பன்கள் அச்சமயத்தில் இந்திய இராணுவத்திடம் தங்கள் குழந்தைகளைப் பறிகொடுத்தார்கள். அவர்களையும் ஏன் இந்த வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கவில்லை? பழிவாங்குவதற்கும் ஒரு பலம் வேண்டும். அனைத்தையும் இழந்து நிராதர‌வாக வந்து நிற்கும் அலைக்கழிக்கப்பட்ட ஓர் எளியவனிடம் பழிவாங்கும் உணர்வு என்ன?... வேறு எந்த உணர்வும் இருக்காது...”
“..10/06/1991. இந்த நாளை என்னால் உயிர் உள்ளவரை‌ மறக்க இயலாது. நான் கடைத்தெருவுக்குச் சென்றுவிட்டு, சென்னைப் போரூரில் வாடகைக்கு எடுத்துக் குடியிருந்த வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். எனது வீட்டிற்கு அருகில் இருந்த மளிகை கடைக்கார‌ர் பாண்டியன் என்பவர், என் வீட்டிற்கு காவல்துறையினர் வந்திருக்கிறார்கள் எனக் கூறினார். இந்த இடத்தில் நீங்கள் நன்றாக யோசித்துப் பாருங்கள். இங்கு நான் உண்மையான குற்றவாளியாக இருந்திருந்தால் நான் அக்கணமே தப்பித்து ஓடியிருக்க முடியும். ஆனால் எதையுமே எதிர்பார்க்காமல், எதிர்வரும் கேடுகளை அறியாமல் என் வீட்டிற்குச் சென்றேன். அன்றைய தினம் இர‌வு ஒன்பதரை‌ மணிக்கு என்னையும் எனது மனைவியையும், எனக்கு இர‌ண்டாவதாகப் பிறந்த 3 மாத குழந்தையையும், எனது உடன் பிறந்த சகோதரியையும் சிபிஐ ஆய்வாளர் இர‌மேஷ், இக்பால் மற்றும் இரு காவலர்கள் விசாரித்துவிட்டு, அனுப்பிவிடுவதாக சிபிஐ அலுவலகம் அமைந்திருந்த மல்லிகைக்கு அழைத்துச் சென்றார்கள்.
அப்பொழுது கூட என் மனதில் பெரிதாக அச்சமில்லை. ஒரு அகதியாய் தஞ்சம் புகுந்தவனின் வாழ்க்கை நிலையற்றது மட்டுமல்ல, இதுபோன்ற காவல் கெடுபிடிகளுக்கு உட்பட்டது என்பதனை நான் நன்கு அறிந்திருந்தேன்...”
“...அந்த அறையில் இருந்த அலுவலர்கள் என்னைச் சூழ்ந்து நின்றனர். அதில் ஒரு அதிகாரி சிவராசன், காந்தன் இருவரை‌யும் தெரியுமா எனக் கேட்டார். எனக்குத் தெரியாது எனக் கூறிய நொடியில், கடுமையான வேகத்தில் என் முகத்தில் ஓர் அறை விழுந்தது. முதல் அடியிலேயே பொறி கலங்கிப் போனேன். பிறகு அங்கு இருந்த அனைவரும் சேர்ந்து கொண்டு அடிக்கத் துவங்கினர். அடி தாங்காமல் கீழே விழுந்த என் மீது ஷு காலால் உதைத்தனர். நான் வலி தாங்காமல் கத்தும் போது நான் கத்திய சத்தம் பக்கத்திலிருந்த என் மனைவிக்கும், என சகோதரிக்கும் கேட்டிருக்க வேண்டும். நான் கத்தும் போதெல்லாம் அவர்களும் கத்திக் கொண்டிருந்தார்கள்.."
"...என்மீது விழுந்த அடிகளும் உதைகளும் ஏற்படுத்திய வலிகளை விட, இவர்கள் ஏன் இப்படி அடிக்கிறார்கள் என்ற வினா ஏற்படுத்திய உறுத்தலே எனக்குக் கடுமையான வலியைக் கொடுத்தது. ஒரு கட்டத்தில் அவர்கள் அடிக்கும் அடியின் வலி மெதுவாகக் குறையத் துவங்கியது. அப்போது தான் எனக்குப் புரிந்தது நான் மயங்கிக் கொண்டிருக்கிறேன் என்று. விழித்துப் பார்த்த போது, நான் அந்த சிமெண்ட் தளம் போடப்பட்ட தரை‌யில் சுருண்டு கிடந்தேன். நான் கிடந்த அந்த சிமெண்ட் தரை‌ முழுவதும் எனது வியர்வைத் தடம்.
எனக்கு அந்த நொடியில் கடுமையான தாகம் எடுத்தது. அங்கே அருகில் நின்று கொண்டிருந்த காவலரிடம் குடிக்கச் சிறிது தண்ணீர்க் கேட்டேன். ஆனால் காவலர் எனக்குத் தண்ணீர் தர‌ மறுத்துவிட்டார். கடுமையான தாகம் ஏற்படுத்தும் துயர‌ம் மிகக் கொடுமையானது. ஒரு குவளை குடிநீருக்காக என் உயிரை‌யும் நான் மாய்த்துக்கொள்ளத் தயாரானது போன்ற மனநிலை. கடுமையான தாகமும் மிகுதியான உடல் வலியும் தந்தக் களைப்பினால், நான் அப்படியே கண்ணயர‌த் துவங்கினேன். அப்போது சுளீர் என்று முகத்தில் ஒரு வலி. அயர்ந்த எனது முகத்தின் மீது அருகில் நின்று கொண்டிருந்த காவலர் குளிர்ந்த நீரை‌த் தெளித்தார். ஏற்கெனவே கலங்கி இருந்த எனது விழிகளில் இருந்து பெருகிய கண்ணீரோடு தண்ணீரும் கலந்து உலர்ந்த எனது உதடுகளின் மீது பட்டது.
நான் எனது முகத்தில் வழிந்த தண்ணீரை‌ நக்கிக் குடித்து என் தாகம் தணிக்க முயன்றேன். அப்போதுதான் ஆய்வாளர் சுந்தர்ராஜன் என்பவர் அந்த அறைக்குள் வந்தார். வந்த வேகத்தில் வேகமாக ஓர் அடி, என் முகத்தில் அடித்தார். என் பல்லில் பலமாக அடிபட்டு இர‌த்தம் கொட்டியது. அந்த நொடியில் இருந்து பாதிக்கப்பட்ட பல்லைச் சிறைக்கு வந்த பிறகுதான் நானே பிடுங்கி எறிந்தேன்.
அந்த இர‌வின் ஒவ்வொரு நொடியும் எனக்கு நினைவிருக்கிறது. மிக நீண்ட வலி மிகுந்த கொடுமையான இர‌வுகள் என் வாழ்வில் வர‌ப்போகின்றன என எனக்கு அப்போதுத் தெரியாது. அந்த இர‌வில் தூங்கவிடாமல் செய்வதற்கு எனக்கு ஒரு காவலர் நியமிக்கப்பட்டிருந்தார். அவருடைய வேலை என்னவெனில், என்னைத் தூங்கவிடாமல் துன்புறுத்துவதும், மீறித் தூங்கினால் முகத்தில் தண்ணீர் அடித்து எழுப்புவதும் தான். விசார‌ணை முறைகளில் தூங்கவிடாமல் துன்புறுத்தும் விசார‌ணை முறை, மனிதனை மிகவும் வதைக்கும் கொடுமையான ஒன்றாகும். களைத்த உடல் கண்ணயரும்போது அதைத் தடுத்தால் அந்த உடல் மேலும் பலவீனமாகி தாங்கமுடியாத உளவியல் சிக்கலுக்கு ஆட்படும். இப்படி உளவியல் சிக்கலுக்கு ஆட்படும் ஒருவனிடம் இருந்து எதை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என்ற அனுபவங்கள் தந்த பாடங்களைத்தான் காவல்துறையினர் நாளது தேதிவரை‌ கடைபிடித்து வருகின்றனர். இறுதியாக விடியற்காலை என்னை தூங்கவிடாமல் துன்புறுத்திய காவலரே‌ கண்ணயர்ந்துவிட்டார். பாவம் அவரும் மனிதன் தானே. நானும் அப்படியே கண்ணயர்ந்தேன். வெளியே கொடூர‌மான இர‌வு துளித்துளியாய் விடிந்து கொண்டிருந்தது.
அடுத்த நாள் காலை எழுந்து பார்த்த பொழுது எனது அறையில் எனக்கு அறிமுகமில்லாத சுபா சுந்தர‌ம், ஓ.சுந்தர‌ம் மற்றும் சிலர் இருந்தார்கள். யார் யாரோ வந்தார்கள். சிவராசன் தெரியுமா, காந்தன் தெரியுமா எனக் கேட்ட கேள்வியையே திருப்பித் திருப்பிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். தெரியாது என நான் சொன்ன அடுத்த நொடியில், அவர்கள் அடிக்கத் துவங்கிவிடுவார்கள். அன்று பகல் முழுக்க என்னை அடித்துக்கொண்டே இருந்தார்கள். என்னை விசாரித்த விசார‌ணை அதிகாரிகளுக்கு நேர‌ம், காலம் கிடையாது. இர‌வு பகல் என்றெல்லாம் அவர்கள் பார‌பட்சம் காட்டுவதில்லை. எப்போதெல்லாம் அவர்களுக்கு தோன்றுகிறதோ அப்போதெல்லாம் என்னைக் கேள்விகேட்டு அடித்துக் கொண்டிருந்தார்கள். ஒரே‌ மாதிரி அடித்தால் வலி பழகிப் போய்விடும் என்பதற்காக, அவர்களுக்குத் தெரிந்த வித்தியாசமான நடைமுறைகளை எல்லாம் கடைபிடித்தார்கள்..."
"...என்னைக் கைது செய்து மூன்றாம் நாள் மதியம் என்று நினைக்கிறேன், சிவராசன் எங்கே எனக் கேட்டு என்னை அடித்துக் கொண்டிருந்த விசார‌ணை அதிகாரிகளுக்குத் திடீரென ஒரு சிந்தனை தோன்றியது. என் இர‌ண்டு கால்களையும், சேர்த்து கட்டத் துவங்கிய அவர்களின் எண்ணம் குறித்து நான் புரிந்துக் கொண்டேன். நான் ஒத்துழைக்க மறுத்தேன். இருந்தும் அவர்கள் என்னை விடவில்லை. என்னைக் கட்டாயப்படுத்தி தலைகீழாக என்னைத் தொங்கவிட்டார்கள். பலமற்ற கயிறு போலும், கயிறு அறுந்து நான் கீழே விழுந்தேன். எனக்கு முதுகில் பலமாக அடிபட்டது. நூறு ஊசிகளை எடுத்து நடு முதுகில் குத்தியதைப் போன்று மிகக் கொடுமையான வலி. வலியின் மிகுதி எனக்கு மயக்கத்தைத் தந்தது. மயங்கினேன். கடுமையான உடல்வலியும், கொடுமையான குடிநீர்த் தாகமும் ஒன்றுக்கொன்று உடன்பிறந்தவைப் போல் என்னை உலுக்கி எடுத்துவிட்டன.
மயங்குவதும், மயக்கம் தெளிய காவலர்கள் முகத்தில் தண்ணீர்த் தெளிப்பதும், அந்தத் தண்ணீரில் நான் நாக்கை நனைத்துக் கொள்ளுவதுமாக நேர‌ங்கள் கழிந்தன. எதன் பொருட்டும் காவலர்கள் அடிப்பதை நிறுத்தவே இல்லை. நேர‌ம் அதிகரிக்க என் முதுகு வலியின் தீவிர‌ம் அதிகமாகிக் கொண்டே இருந்தது. நான் வலி தாங்க முடியாமல் கத்திக் கதறிக் கொண்டே இருந்தேன்…”
"...சிபிஐ யின் விசார‌ணை முறை என்பது மிகத் தனித்துவமானது. பல்வேறு குழுக்கள், பல்வேறு விசார‌ணை முறைகள், குறிப்பாக டி.ஐ.ஜி. ராஜூ தலைமையில் இருந்த டி.எஸ்.பி.சிவாஜி, ஆய்வாளர் இர‌மேஷ், ஆய்வாளர் மாதவன், ஆய்வாளர் இக்பால் மற்றும் சிலர் இருந்த அந்தக் குழுவினரை‌ என்னால் எப்போதும் மறக்க இயலாது. ஏனெனில், விதவிதமாக அடிப்பதற்கும், வகைவகையாக துன்புறுத்துவதற்கும் பெயர் போன குழு அது. இர‌ண்டு கை விர‌ல்களுக்கு இடையே பேனாவை அழுத்திப் பிடித்துக் கொண்டு பேனாவைத் திருப்புவது. இர‌ண்டு கைகளையும் மேலே உயர்த்திக் கொண்டு நாற்காலியில் உட்காருவதைப் போன்று நிற்கச் சொல்லி, சிறிது நேர‌ம் நின்றதும் தசை பிடித்து வலிக்கும்போது, பின்புறம் லத்தியால் அடிப்பது போன்ற பலவிதமான சித்திர‌வதைகள்..."
"...உண்மையைக் கேட்பதற்கு உலகிற்குச் செவிகள் இல்லை. அதே உலகிற்கு பொய்களைப் பர‌ப்ப ஆயிர‌ம் உதடுகள் உண்டு என்பதை நான் கொஞ்சம் கொஞ்சமாக உணர‌த் துவங்கி இருந்தேன். எங்களை அழைத்து வருவது தெரிந்து நிறைய பத்திரிகைக்கார‌ர்களும், புகைப்படக்கார‌ர்களும் அங்கே குழுமியிருந்தார்கள். உண்மை எதுவென அறிவதற்கும், புரிந்துகொள்வதற்கும் யாருக்குமே அங்கு விருப்பமில்லை. மாறாக, மறைந்த இராசீவ் காந்தியைக் கொன்ற கொலையாளிகள் யாöர‌ன கண்டுபிடிக்கப்படாமல் இருந்த வெற்றிடத்தை எதைக்கொண்டேனும், எவரை‌க் கொண்டேனும் நிர‌ப்பிவிட வேண்டும். இல்லையேல், மாபெரும் வல்லாதிக்க நாடாக, வளரும் நாடுகளின் தலைவனாக விளங்கும் இந்தியாவின் புலனாய்வுத் துறைக்கு அது மிகப்பெரிய களங்கமாக விளங்கும் என்பதற்காகவே இந்த அவசர‌மும், மூர்க்கமும் நிறைந்த தவறான முடிவு..."
"...ஈழத்திலிருந்து அகதிகளாக என்னுடன் வந்த ஜெயக்குமார், அவர‌து மனைவி சாந்தி, அவர்களது மகன் பார்த்திபன் ஆகியோரை‌, நான் கைது செய்யப்பட்டு இரு நாட்களுக்குப் பின்னர் கைது செய்திருந்தார்கள். என் கண் எதிரே‌ பல முறை ஜெயக்குமார் குடும்பத்தினரை‌ச் சித்ர‌வதை செய்யும் போது நான் மிகவும் துயருற்றுக் கண்ணீர் சிந்தினேன். ஜெயக்குமார் மனைவியும் , என் சகோதரி முறையிலான சாந்தி உச்சநீதிமன்ற தீர்ப்பு மூலம் விடுதலை அடைந்தது எனக்குத் தனிப்பட்ட முறையில் பெருத்த ஆறுதலை அளித்தது.
என்னால் என்னையே காப்பாற்றிக் கொள்ள இயலாத மிகத் துயர‌மான சூழலில் நான் என்னோடு வந்த உறவினர் குடும்பமான ஜெயக்குமார் குடும்பம் படும் பாடுகளைக் கண்டு கண்ணீர் வடிக்க மட்டுமே முடிந்தது..."
"...தாங்கள் சொல்வதை உண்மையென என்னை ஒத்துக் கொள்ளச் செய்ய வேண்டும் என்ற மூர்க்கத்தில் டிஐஜி.சிறிக்குமாரும், அவருடைய ஆட்களும் நான் தங்கியிருந்த அறைக்கு அருகில் உள்ள குளிரூட்டப்பட்ட அறைக்கு இழுத்துப் போனார்கள். இருட்டாக இருந்த அந்த அறையில் கூர்மையான பனிக்கட்டி மீது என்னை நிற்க வைத்து விட்டு குளிர்சாதனத்தின் குளிரூட்டும் சக்தியை அதிகப்படுத்தினார்கள். நான் அந்த பனிக்கட்டி மீது நிற்கும் போது உடலெல்லாம் எனக்கு கடும் வலி. உயிரே‌ என்னை விட்டு பிரிவது போன்ற அவஸ்தை. நேர‌ம் கழியக்கழிய என் உடல் குளிரால் விறைக்கத் துவங்கிவிட்டது. குளிரால் விறைத்துப் போன என்னை அடித்துக் கொடுமை செய்தார்கள். அவர்கள் சொல்லும் பொய்யை ஒப்புக்கொண்டால் வழக்கு முடிந்தவுடன் அந்த வீடு எனக்கே கிடைத்து விடும் என்று ஆசை வார்த்தைகளை அள்ளி வீசினார்கள். நான் உறுதியாக மறுக்கவே, என்னை அடித்துக் கொண்டே இருந்தார்கள். அந்த இர‌வும் என்னை தூங்க விடவில்லை..."
"...அந்த காலக்கட்டத்தில் சிக்கிய யாராவது ஒருவரை‌ இழுத்து வந்து அங்கு அடித்துக் கொண்டிருப்பார்கள். ஒரு வேளை அவர்களுக்கு அடிக்க ஆள் கிடைக்காவிட்டால் அதிகாரிகள் மாதவனும், ரமேசும் என்னை அழைத்துக் கொண்டு போய் ஏதாவது கேட்டு அடிப்பார்கள்..."
"...இந்திய நாட்டின் முன்னாள் பிர‌தமர் ஒருவரின் கொலை வழக்கு மிகவும் ஒருதலை சார்பாக நடைபெற்று முடிந்திருக்கிறது. உண்மையில் என்ன நடந்தது என அறிய யாருக்குமே விருப்பமில்லை. இந்தக் கொலை வழக்குகளை விசாரித்த புலனாய்வுத் துறையினர், தாங்கள் புனைந்த ஒரு கதைக்கு கதாப்பாத்திர‌ங்கள் தேடினர். அந்தக் கதாப்பாத்திர‌ங்களாக சிக்கிக் கொண்டவர்கள்தாம் நாங்கள். உண்மையில் எனக்கு அமர‌ர் இராசீவ் காந்தியின் மீது பரிதாபம் தான் மிஞ்சுகிறது. ஒரு வல்லாதிக்க நாட்டின் முன்னாள் பிர‌தமர் கொலையின் உண்மைகளை அறிய யாருக்குமே விருப்பமில்லை, என்பதுதான் எத்தனைத் துயர‌மான விடயம்..."
"...தடா சட்டத்தின் கீழ் நான் அளித்ததாகக் கூறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம் என்பது காவல்துறையினர் என்னை சித்திர‌வதைகள் செய்து, பலாத்கார‌மாகப் பல வெற்றுத் தாள்களில் கையெழுத்துப் பெற்றது. அந்த ஒப்புதல் வாக்குமூலத்தை அவர்கள் தாங்களாகவே தயாரித்தனர்' என்று என் போலிசு காவல் முடிந்து நீதிமன்ற காவலுக்கு மாற்றப்பட்ட போது நீதிமன்றத்தில் மனுகொடுத்தேன். நீதிபதி, வழக்கு விசார‌ணையின் போது விசாரிப்பதாகக் கூறினார். ஆனால் வழக்கு விசார‌ணை நடைபெற்ற தடா நீதிமன்றத்தில் இந்த மனு விசார‌ணைக்கு வர‌வே இல்லை..."
"...இராசீவ் காந்தி கொலை என்பது பலவிதமான இர‌கசியங்களைக் கொண்ட ஒரு குற்ற நடவடிக்கையாகும். ஒரு நாட்டின் முன்னாள் பிர‌தமரின் கொலையில் தொடர்புடைய, சந்தேகிக்க வேண்டிய பலவித கார‌ணிகளை இந்திய புலனாய்வுத்துறை வேண்டுமென்றே நிராகரித்தது. தாங்கள் முடிவு செய்திருக்கும் இந்த வழக்கின் பாதையில் இருந்து சற்றே விலகி உண்மையைக் கண்டெடுத்துவிடக் கூடாது என்பதில் இந்தியப் புலனாய்வுத்துறை மிகுந்த பிடிவாதத்துடன் இருந்தது. இந்த வழக்கில் தொடர்புடையவர்களாக அடையாளம் காட்டப்பட்ட பலரும் என்னைப் போலவே சிக்கிக் கொண்டவர்கள்தாம்…”
இங்கு எடுத்துக் காட்டப்பட்டிருப்பது புத்தகத்திலிருந்து ஆங்காங்கே சில பகுதிகள் மட்டும்தான். முழு புத்தகமும் மனித உரிமைகளைப் புறந்தள்ளிய, உண்மைகள் குறித்து சிறிதும் அக்கறையில்லாத சிபிஐ-ன் விசாரணை முறைகளையும், அதிலிருந்த ஓட்டைகளையும் பேசுகிறது.
வழக்கறிஞர் தடா சந்திரசேகரரிடம் இராபர்ட் பயஸ் அளித்த வாழ்க்கை மற்றும் வழக்குக் குறிப்புகளை, வழக்கறிஞர் மணி.செந்தில் மிகச் சிறப்பானதொரு புத்தகமாக ஆக்கியுள்ளார்.
விசாரணை என்ற பெயரில் இராபர்ட் பயஸ் அனுபவித்த சித்திரவதைகளை அதன் வலியை வாசகர்களுக்குக் கடத்துவதில் மணி செந்திலின் மொழியாளுமை பெரிதும் துணை நின்றிருக்கிறது.
இராஜீவ் சர்மா எழுதிய புத்தகம் பலத்த எதிர்பார்ப்புடனும், பெரும் ஆராவரத்துடனும் வெளியாகி விட்டது. உண்மை எப்போதும் ஆர்ப்பரிப்பதில்லை; அடங்கியே இருக்கிறது. மணி செந்தில் எழுதிய புத்தகமும் அதுபோலத்தான்.
மக்களிடம் நாம் எதை கொண்டு செல்லப் போகிறோம்?
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=15190&Itemid=263)
நன்றி.- கீற்று.காம் (

Tuesday, May 24, 2011

இலக்கணமற்ற சிறைக்கொடுமைகளின் இலக்கிய பதிவாய் விடுதலைக்கு விலங்கு புத்தகம் -பிரான்ஸிருந்து முனைவர் தமிழீழநாதன்.


ஒருபுத்தகம் படித்த வாசகனை, அந்த புத்தகத்தை வாசித்து முடிப்பதற்குள் அவன் மனதில் ஒரு உளவியல் மாற்றத்தை
 உண்டுபண்ணுமா? என்ற பொதுவான கேள்விக்கு விடுதலைக்கு விலங்கு புத்தகத்தை படித்து முடித்தவனாய் நான் தரும் பதில், விடுதலைக்கு விலங்கு புத்தகத்தை படித்தவன், படித்து முடிப்பதற்குள் ஒரு மிகச்சிறந்த தமிழ் உணர்வுடைய சிந்தனையாளனாய் உளவியல் மாற்றத்திற்கு உட்படுவான் என்பது மறுக்க முடியாத உண்மை.

இப்புத்தகத்தை படித்த அவன் கண்கள் கண்ணீரை சுமக்கும் அவன் இதயம் ஆற்றொண்ணா சோகத்தில் தவிக்கும். அவன் உயிர்நாடி விடுதலை உணர்வை நாடி துடிக்கும். காவல்த்துறைமீதும் நீதித்துறைமீதும் அவன் வைத்து இருக்கும் நம்பிக்கையை நிராகரிப்பான். இவைஅனைத்தும் இப்புத்தகத்தை வாசித்த அவனுள்ளே நடக்கும்.

முதலில் ஒரு தமிழ் உணர்வாளனாய், விடுதலை சிந்தனையாளனாய், சீமானின் லட்சோப லட்ச தம்பிகளில் ஒருவனாய், இந்த மண்ணில் வாழ்கின்ற இனமானமிக்க உறவுகளின் உள்ளமாய் களம் வெளியீட்டாளருக்கு கண்ணீர் கலந்த கொடுமையை வெளியிட்டமைக்காகவும் நன்றி. ராசீவ் காந்தி கொலை என்ற ஒற்றை சிந்தனையால் மட்டும் தமிழ் இனத்தை அழிக்க நினைக்கின்ற ஊடகவியலாளர்கள் மத்தியில் உங்களின் துணிவுடன் கூடிய பணி பாராட்டுக்கு அப்பாற்ப்பட்டது.

மாவீரன் பகத்சிங் அவர்களின், ஒரு சமுதாய போராளியின் மனதில் உள்ள மிக நாயமான கருத்துக்களையும், ஒரு மாவீரனின் உண்மையான சிந்தனைகளையும் தொடக்கமாக கொண்டு இந்த 168  பக்க ஒரு தமிழனாய் பிறந்த தனிமனித பாடுகளை சுமந்த ஏடுகள். வாழ்க்கையில் சுந்தரக்காண்டத்தை சுவைக்க விரும்பிய ஒரு இனமானம் மிக்க தமிழனின் வாழ்க்கையில் அரச பயங்கரவாதம் அள்ளித்தெளித்த வனவாசத்தை வாக்கியம் வாக்கியமாய், ஒரு சலனமற்ற தெளிந்த நீரோடையைபோன்று தெளிவாக சொல்கிறது இந்த விடுதலைக்கு விலங்கு புத்தகம்

அய்யா தமிழ் முழக்கம் சாகுல்அமீது அவர்களின் முத்தாய்ப்பான பதிப்புரை மற்றும் அண்ணன் தடா சந்திரசேகர் அவர்கள் இந்த நூல் எப்படி உருவானது என்றும், இந்தநூல் உருவாகவேண்டிய அவசியம் ஆகியவற்றை மிகவும் தெளிவாக பதிவு செய்து உள்ளார். அண்ணன் தடா சந்திரசேகர் சொன்னது போல இந்த நூல் ஆயுள் தண்டனை கைதியாக வஞ்சனைவலையில் சிக்கிய இராபர்ட் பயாஸ் அவர்களின் இறந்தகால சிறை அனுபவங்களாக மட்டும் இருக்காது. அதையும் தாண்டி காவல் துறையினர்களின் தலைமை காவலர்களின் மற்றும் நீதிதேவதையின் கண்களை இறுகக் கருப்பு துணியால் கட்டிவிட்ட பிறகு அந்த நீதிதேவதையின் எதிரே பல அப்பாவிகளை தண்டிக்கும் நீதியரசர்களின் மனதில் மறைந்து போன மனிதநேயத்தின் சாட்சியாகவும் இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.

அதற்க்கு அடுத்ததாக மிகசிறந்த களப்போராளியாக எங்களுடன் களத்திலும், மிகச்சிறந்த தனது எழுத்தினால் அறிவுத் தளத்திலும் அரும்பணி ஆற்றிகொண்டிருக்கும் அண்ணன் மணிசெந்தில் அவர்களின் எழுதுகோல் குருதிப் பெருக்கின் நனைந்த விதத்தை சொல்லி எங்களின் மனதை உறுதிப்பெருக்கில் நிரப்புகின்றார். இந்த நூலின் அழகிய தொகுப்பும், கருத்துகளின் அணிவகுப்பும் அவரின் அயராத உழைப்பால் விளைந்தவை என்பதை வாசிப்பவர்கள் உணர்வார்கள். இவரை தொடர்ந்து அண்ணன் அறிவுசெல்வன் அவர்களின் ராசீவ் காந்தி மரணம்... மறுக்கப்பட்ட நீதி.. என்று தலைப்பின் கீழ் ஒரு தெளிந்த வழக்கறிஞர் அவர்களுக்கே உரிய நடையில் நூலின் சிறப்பை பதிவு செய்திருக்கிறார்.

முனைவர் பால் நுமன் அவர்களுடைய இரத்தின சுருக்கமான ராசீவ் காந்தி கொலை விசாரணை , மற்றும் ஜோடிக்கப்பட்ட வழக்கின் போக்கு ஆகியவற்றை எடுத்துவைத்துள்ளார். அவர் கூறியுள்ள மார்டின் லூதர்கிங் அவர்களுடைய பொன்மொழியில் பொதிந்துள்ள கருத்துக்கள் மிகவும் அருமை.

அடுத்ததாக அய்யா கா. அய்யாநாதன் அவர்கள் மானுடத்தின் மனசாட்சியை உலுக்கும் நியாயமான குரல் என்ற தனது கருத்தை பதிவுசெய்துள்ளார். இவர் இங்கே பதிவு செய்தவை ராசீவ் காந்தி கொலையில் இதுவரை யாரும் பார்த்திராத பார்வை. ஒருகுற்றம் சுமத்தப்பட்டு, அதற்காக நீதியரசர்கள் வழங்கிய தவறான தீர்ப்பால் அண்ணன் ராபர்ட் பயாஸ் அனுபவித்த கொடுமைகளை இந்த நூல் சித்தரித்தாலும் குற்றமே தவறானது என்று பொட்டில் அடித்தாற்ப்போல் சொல்லுகின்றார். ராசீவ் காந்தி கொலைவழக்கில் ஒரு சர்வதேச சதி பின்னப்பட்டு இருப்பதையும், அந்த சர்வதேசச் சதி நிகழ்ந்த பின்னர் அந்த சதிக்கான காரணகர்த்தாவாக தமிழினம் அடையாளம் காட்டப்பட்டு இருக்கிறது என்பதையும் தெளிவாக விளக்குகிறார். போர்க்களத்தில் தமிழனை வெல்ல முடியாத கயவர்கள் சதியை உருவாக்கி தமிழ் சாதியை அழிக்க நினைத்துள்ளனர் என்பதை மிகப்பெரிய பாரத தேசத்தின் பிரதமர் வரும்போது செய்யப்பட்டு இருந்தால் பாதுக்கப்பின் குளறுபடிகள், குண்டு வெடிப்பின்போது போது உடனில்லாத பாதுகாப்பு அதிகாரிகள் மற்று காங்கிரஸ் பெரும் தலைவர்கள் இவர்களின் வாயிலாக அரங்கேற்றப்பட்ட சர்வதேச சதி ஆகியவற்றை மிகத்தெளிவாக விளக்கியுள்ளார்.

இந்த கொலைவழக்கில் உப்பை தின்னவர்கள் யாரோ இருக்க அதற்கான தண்ணீரை நம் தமிழ்ச்சாதி தனது செந்நீராலும், கண்ணீராலும் நிறைவு செய்துகொண்டிருக்கின்றது என்ற உண்மையை தெளிவாக விளக்கியுள்ளார்.

அடுத்ததாக அண்ணன் சீமான்

கொஞ்சம் சித்ரவதை
கொஞ்சம் அடக்குமுறை
கொஞ்சம் கண்ணீர்
கொஞ்சம் இரத்தம்
கொஞ்சம் துயரம்
கொஞ்சம் சோகம்
கொஞ்சம் பிரச்னை
கொஞ்சம் அவமானம்
இப்படி துரத்துகிற வாழ்க்கை

என்று சிறையில் வாடும் அண்ணன் இராபர்ட் பயாஸ் அவர்களின் நொந்துபோன இதயத்திற்கு ஆறுதலை வீசுகிறார். ஆனால் என்னை பொறுத்தவரை அண்ணனின் இந்த வரிகள் இந்த புத்தகத்தை வாசித்த பிறகு இனமானம் உள்ள தமிழ்த் தம்பிகள் அடைய போகின்ற சொல்ல முடியாத சோகத்தை குறைக்கவும் அவர்களின் மனதில் விடுதலை உணர்வை வீரியபடுத்தவும் சொல்லப்பட்டதாகவே உண்கிறேன். இந்த நூலை வாசித்த தம்பிகள் இதயத்தில் சுமக்கபோகிற ரணத்தின் வலியினை தனது மெல்லிய வார்த்தைகளால் குறைத்து, எங்களையெல்லாம் வழிநடத்தும் ஒரு அற்புதத் தளபதியாக உன்கனவு நனவாகும் எனச் சொல்லி நம்பிக்கையுட்டுகிறார்

அடுத்ததாக அண்ணன் இராபர்ட் பயாஸ் இவர்களால்... இதுவரையில்... நான்... என் முகப்புரையை வைக்கின்றார். விடுதலைக்கு விலங்கு புத்தகம் மூன்று பாகமாக பிரிக்கப்பட்டு முதல் பாகத்தில் பதினோரு அத்தியாயங்களாக தனது சிறைச்சாலை கொடுமைகளை குறிப்புகளாக எழுதி வைத்திருந்தவற்றை அண்ணன் மணி செந்தில் தமக்கே உரிய மிகச்சிறந்த எழுத்தாற்றலினால் கண் முன் தோன்றும் திரைக்காட்சிகளாக வடித்து இருக்கின்றார். முதல் அத்தியாயம்

விழிநீர் துடைக்கின்ற விரல்களைத்தேடி எனத்தொடங்கி    
துயர்வால்வில் சூழ்ந்த இருள்...,
வலி துயர் வேறொன்றுமில்லை...,
கொடும் வலிதந்த துயர்வெளி...,
அலைக்களிப்பின் இருட்பாதையில்...,
காண்பதெல்லாம் காட்சியல்ல...,
வெளிச்சபுள்ளிகள் தீர்ந்த வானத்தில்...,
வேர்கள் சுமந்த வலி...,
விடுதலைக்கு விலங்கு...,
உலர்ந்த தூரிகையில் இன்னும் வரையபடாத ஓவியங்கள்..., முடிவிலியான முடிவில்...,
என் அற்புதமான தலைப்புகளில் இராபர்ட் பயஸ் அவர்களின் இருபது ஆண்டுகால
சிறைக்கொடுமைகளை, தனது ஏக்கங்களை, தனது எதிபார்ப்புகளை, தனது துயரங்களை சிறிதும் மிகைப்படுத்தாமல் இலக்கிய வடிவில் பதிவு செய்து இருகின்றார் .

அரச பயங்கரவாதமும், தடாசட்டமும் வேண்டுமென்றே சுமத்திய குற்றங்களையும், அந்த குற்றங்களில் காணப்படும் முன்னுக்கு பின்னான முரண்களையும் மிகவும் எளிமைபடுத்தி பாகம் இரண்டாக
ராசீவ் கொலைவழக்கு... முரண்களும்... உண்மைகளும்... என்ற தலைப்பின்கீழ் தனியேவும் தந்துள்ளார்.

பாகம் மூன்றில்

உள்ளத்தில் இருந்து உண்மையாய் சில உணர்வுகள்... என்ற தலைப்பின் கீழ் தந்துள்ளார். இந்த பகுதியில் இராபர்ட் பயஸ் அவர்கள் தொப்புள் கொடி உறவுகளாகிய தாய்தமிழக மக்களிடம் இருந்து என்ன எதிர்பார்க்கின்றார் என்பதையும், நாம் இதுவரை என்ன செய்தோம், நாம் என்ன செய்ய தவறினோம் என்பதை கனத்த இதயத்தோடு சொல்லி படிக்கும்
வாசகர்களை எல்லாம் கண்ணீர் கடலில் ஆழ்த்துகிறார்:

இந்த புத்தகத்தில் இருக்கும் ஒவ்வொரு அத்தியாயத்தையும் அதில் சொல்லி இருக்கின்ற கொடுமைகளையும் என்னால் வார்த்தையில் விவரிக்கமுடியவில்லை. அரச பயங்கரவாத சட்டத்தின் கோர கைகளில் சிக்கிய அண்ணன் ராபர்ட் பயாஸ் அவர்களின்வாழ்க்கையில் பட்ட பாட்டினையும், கொடுமைகள் நிகழும்போது அவர் துடித்த துடிப்பினையும் துளியும் மிகைபடுத்தாமல் அண்ணன் மணி செந்தில் வார்த்தைகளால் வடித்துள்ளார்.  பயஸ் அவர்கள் சிறையில் பட்டப் பாட்டினை சுமந்த இந்த ஏட்டினை படித்தபிறகு நான் பட்ட பாட்டினை என்னால் எழுதமுடியவில்லை.

சுற்றிலும் ஆல்ப்ஸ் மலைகளால் அலங்கரிக்க பட்ட பிரஞ்சு நாட்டின் கிரிநோப்ல் மாநகரில் இருந்து இப்புத்தகத்தை படிக்க நேர்ந்தது. எப்போதும் குரல்வளை நெரிக்கும் குளிரால் நிரம்பிய எனது அறை, இப்புத்தகத்தை படித்து முடித்தபிறகு அனலாய் சுட்டது. சுட்டது அறை மட்டும் அல்ல, தமிழனாய் பிறந்த எனது ஆற்றாமையும்தான். ஒவ்வொரு அத்தியாயத்தை படித்து முடிக்கபோகும் தருவாயில் எனது கண்கள் கண்ணீரை சொரிந்ததை நான் மட்டுமே அறிவேன்.

ஒவ்வொரு அத்தியாயத்தின் ஆரம்பமும் ஒரு பொன்மொழியோடு ஆரம்பித்து முடியும்போது புண்ணின் வலியாய் இதயத்தை சுட்டது.ஒரு அடர்ந்த சோகத்தை தாங்கி ஓடிவரும் தெளிந்த நீரோடையை போன்று ஒவ்வொரு அத்தியாயமும் இருக்கின்றது.
ஒருமனிதன் தனக்கு நிகழ்ந்த கொடுமைகளை இவ்வளவு நலினமாக, எந்தவிதமான கொடுஞ்சொல் இன்றியும் பதிவு
செய்யவேண்டுமானால் அந்த மனிதனின் மனது எவ்வளவு பக்குவ பட்டிருக்கவேண்டும் என்பது புத்தகத்தை வாசித்த
உள்ளங்களுக்கு தெரியும்.

இதைத்தான் அண்ணன் சீமான் தனது முகப்பின் பதிவில் நீ சிறையில் இருந்தாலும் பற்றோடு இருகிறாய்...     என்று தெளிவாக சொல்லி இருகின்றார்.

இறுதியாக மீண்டும் ஒருமுறை களம் வெளியீட்டாளர்களுக்கு தமிழ் உணர்வாளர்களில் நன்றியை காணிக்கையாக்குகிறேன். இன்றைய சூழலில்  தமிழகத்தில் வரலாறு திருத்தி அமைக்கப்பட்டு இருக்கின்றது. இனமானம் மிக்க இளைஞர்களின் கடும் உழைப்பினாலும், கருத்தாழம் மிக்க அண்ணன் சீமானின் தேர்தல் பரப்புரையாலும் , இன எதிரி காங்கிரஸ் தமிழகத்தில் இல்லாமல் போய்விட்டது.இனத் துரோகி கருணாநிதியின் தலைமை எதிர்க்கட்சியாக கூட இருக்க முடியாத
இழிநிலைக்கு தள்ளப்பட்டு இருகிறது. இதற்கெல்லாம் காரணம் காங்கிரஸ் தமிழனுக்கு செய்த துரோகம் என்பதை
இன்றுவரை எந்த ஊடகமும் பதிவு செய்யவில்லை. இந்த சூழல் எங்களுக்கு களம் அமைத்துகொடுத்த வெளியீட்டாளருக்கு
நன்றி.

மேலும் இனமானம் மிக்க சீமானின் தம்பிகளாகிய நமக்கு மன்றும் ஒரு கடமை நம் கண்முன்னே காத்து கிடக்கின்றது. இந்த புத்தகத்தை நாம் படித்து நமது வீட்டில் வைத்து இருக்கும் அதேவேளையில் தமிழ் நாட்டில் உள்ள நடுநிலை சிந்தனையாளர்கள் அனைவரின் கைகளிலும் இதை கொண்டுபோய் சேர்க்கவேண்டியது அவசியம்.
இதை படிக்கும் நடுநிலையாளர்கள் மனதில் உறுதியான ஒரு உளவியல் மாற்றம் நிகழும் .
மேலும் ராஜீவ் காந்தியை தமிழினம் பேசுபவர்கள் கொன்றுவிட்டார்கள் என்று பேசித்திரியும் காங்கிரஸ் காரர்களிடம் அய்யா அய்யாநாதன் அவர்களின் முகப்புரையாவது படிக்க சொல்லி உங்கள் தலைவரை கொன்றது நாங்கள் இல்லை ஒரு சர்வதேச சதி என்று புரிந்துகொள்ளுங்கள் என்று சொல்லவேண்டும். இதுப் போன்ற நூலை உருவாக்குவதும், அதை வாசிப்பதும் கூட ஒருவகையான களப்பணிதான் என்பதை படித்தவர்களிடம் ஏற்ப்படும் உளவியல் மாற்றமே உணர்த்தும்.

மொத்தத்தில் விடுதலைக்கு விலங்கு புத்தகம் அண்ணன் ராபர்ட் பயாஸ் அவர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த இலக்கணமற்ற சிறைக்கொடுமைகளின்  இலக்கியப்பதிவாய் அமைந்திருக்கின்றது.

வாசியுங்கள்.உணருங்கள். சிறையில் அடைப்பட்டு கிடக்கும் ராசீவ் படுகொலை வழக்கில் சிக்குண்ட தமிழர்களை விடுவிக்க துணியுங்கள்.

ஒரு கொடூர கொடுமையின் அழகான பதிவு - தமிழீழ நாதன்


என்னை பொறுத்தவரை அந்த புத்தகத்தை பற்றி சொல்ல வேண்டுமானால் "ஒரு அடர்ந்த சோகத்தை தொடர்ந்து
தாங்கிவரும் ஒரு சலனமற்ற நீரோடையின் ஓட்டமாக இருகின்றது". இன்னும் இயல்பாக சொல்லவேண்டுமானால்
"ஒரு கொடூர கொடுமையின் அழகான பதிவு" என்று சொல்லவேண்டும். ஒரு வரிகூட அலங்கரிக்க படாத எதார்த்தம் கொண்ட இயல்புத்தன்மை மாறாத தெளிவான சிந்தனைபதிவு.  

குருதிப் பெருக்கில் நனைந்த என் எழுதுகோல்... என்று தொடங்கும் முகப்பு மிகவும் சிறப்பு.  

இவர்களால்... இதுவரையில்... நான்... என்று தொடங்கும்போது ஒரு மிகப்பெரிய சோகத்தை... ஒரு வலியை இதயம் ஏற்க்கப்போகிறது என்ற எச்சரிக்கை தெரிகிறது.

பால் நியூமன் சொல்லுயிருக்கும் மார்டின் லூதர் கிங் உடைய செய்தி இதயத்தில் ஊசி ஏற்றுவதுபோல் அமைந்து இருகின்றது.  

விழிநீர் துடைக்கின்ற விரல்களைத் தேடி...   உலகின் நெடுநாள் அன்பும் ஆதரவும் சமுக இணைப்பும் இல்லாமல் தவிக்கும்
அண்ணன் இராபர்ட் பயாஸ் அவர்களின் மொத்த சோகத்தையும் தலைப்பிலேயே  சொல்லிவிட்டதுபோல இருகின்றது.
அதே பகுதியில்

11  ஆம் பக்கத்தில் பக்கத்தில் "உண்மையின் வெளிச்சத்தில் இருந்து தப்பிக்க முடியாத இருட்டாகும்"  என்ற சொல்லாடல் மிகவும் சிறப்பு. அதேபக்கத்தில் இறுதியில்  இராபர்ட் பயாஸ் அவர்களின் குழந்தையை கொன்றவிதத்தை பதிவு செய்து இருக்கும் விதம் இதயத்தை பிளப்பதாக அமைந்து இருகின்றது.

13 ஆம் பக்கத்தில் இறுதியில் இராபர்ட் பயாஸ் அண்ணன் "தான் மகனை பறிகொடுத்த ஒரு தந்தையின் மனதில் இயல்பாக எழும் துயரை மறைத்து, மிஞ்சியிருக்கும் என் குடும்பத்தின் எதிர்காலத்தை நினைத்து நான் உயிர்வாழ எண்ணியதுதான் மாபெரும் தவறு. என் மகனோடு நானும்போயிருக்கவேண்டும்" என தன்னை நொந்துகொள்ளும் போது என்னால் அழாமல் இருக்கமுடியவில்லை.  

14  ஆம் பக்கத்தில் பழமொழிக்கு அண்ணன் இராபர்ட் பயாஸ் மனநிலையில் இருந்து சொன்ன புது விளக்கம் நீதித்துறையை கண்ணத்தில் அறைந்ததுபோல் இருந்தது.

16  ஆம் பக்கத்தில் " இயற்க்கை மனிதன் தான்கிகொள்ளும் அளவிற்கே துன்பத்தை அளிகின்றது" என்று கூறும் இடத்தில் என்னால் தாங்கிக்கொள்ள முடியாத அளவிக்கான சோகம் குடிகொண்டது மனதில்.

17  ஆம் பக்கத்தில் சொல்ல பட்ட "வெளியே கொடூரமான இரவு துளித்துளியாய் விடிந்து கொண்டிருந்தது" என்று இரவு இராபர்ட் பயாஸ் அனுபவித்த கொடுமைகள் அனைத்தையும் ஒற்றை வாக்கியத்தில் சொல்லியிருக்கின்றது.

21  ஆம் பக்கத்தில் "உண்மையை கேட்பதற்கு ஒரு செவிகள் இல்லை ஆனால் பொய்யினை பரப்புவதற்கு ஆயிரம் உதடுகள் இருக்கின்றது" என்று சொல்லும் போது மொத்த சமூக அவலங்களையும் கோடிட்டு காட்டியுள்ளது.

26  ஆம் பக்கத்தில் சொல்லி இருக்கின்ற இராபர்ட் பயாஸ் அண்ணன் தனக்குள் கோங்கிய நாயமான கோபத்தை தனக்குள்ளாகவே அடக்கிகொண்ட விதம் ஒரு நாதியற்ற மனிதனின் அவனுக்குள்ளாகவே வன்மமாவதை உணரமுடிகின்றது.

28  ஆம் பக்கத்தில் சொல்லி இருக்கின்ற " மதிப்பிற்குரிய ஊடக துறை நண்பர்களே நீங்கள் அறிந்துகொள்ள விரும்புவது, தெரிந்துகொள்ள துடிப்பது செய்திகளையா ? உண்மைகளையா ?"   என்ற எனக்குள் நானே பலமுறை கேட்டுக்கொண்ட
கேள்விகள்.

33  ஆம் பக்கத்தில் கடுமையான வலிகளோடு கடத்தவேண்டிய இரவின் கொடுமைக்காக தனது அழகிய குடும்பத்தை
இராபர்ட் பயாஸ் நினைத்து கொள்ளுவது கண்களில் கண்ணீரையும், இதயத்தில் மூர்க்கத்தையும் என்னுள் ஏற்ப்படுத்தியது.

35  ஆம் பக்கத்தில் சொல்லப்பட்ட "தானாக அகப்பட்டதை இம்சித்து கொள்"   அருமையான தேர்வு.

36  ஆம் பக்கத்தில் " என்மகனை எப்போதாவது யாராவது காண நேர்ந்தால், அவன் விழிகளை உற்று பாருங்கள் அதில் வடியும் ஏக்கத்தை யாராலும் ஈடு செய்யமுடியாது"    ஒரு
தந்தையிடம் இருக்கும் தாய்மையின் பிரிவின் ஏக்கங்கள் கண்களை குளமாக்குகிறது.

37  ஆம் பக்கத்தில் " சிறைவாழ்க்கை என்பது .... எல்லாவித இயற்க்கை சமன்பாடுகளையும் கலைத்து போடும்
தண்டனையாக இருகின்றது" எனக்கூறும் போது அங்கே இளைக்க படும் கொடுமைகளை உணரமுடிகின்றது.

39  ஆம் பக்கத்தில் துவக்கத்தில் சொல்லி இருக்கின்ற " சலமில்லாமல் ஒரு கற்சிலைபோல்... என்னை சுற்றி வார்த்தைகள் பூசிகளைப்போல் பறந்து கொண்டிருந்தது"   இந்த புத்தகத்தை படித்த நேற்று எனது இரவும் இப்படித்தான் இருந்தது.

42  பக்கத்தில் " உலர்ந்த தூரிகைகளில் இன்னும் வரையப்படாத ஓவியங்கள் .... தலைப்பு மற்றும் தீபசெல்வன் அவரளின் வாசக தேர்வு சிறப்பு.

45  ஆம் பக்கத்தில் இராபர்ட் பயாஸ்  அண்ணன் அவர்கள் சீமான் படத்தை வரைந்து மாடியிருக்க்கின்றேன் என்றும் அதற்க்கான காரணத்தை சொல்லும் போது எனது அறையில் வைத்து இருக்கும் இரண்டு அண்ணன்களின் படமும் ( தேசிய தலைவர் + அண்ணன் சீமான் ) கண்ணீர் மறைத்த கண்களோடு பார்த்தேன்.

46  ஆம் பக்கத்தில் "அறிவுரைகழகம்" என்பதன் சுயரூபத்தை தோலுரித்த விதம் மிகவும் அருமை.

முரண்களும்... உண்மைகளும்  கீழ் உள்ள அனைத்து கூற்றுகளும் மிக தெளிவாக சட்டம்தெரியாத பாமரகளும் புரிந்துகொள்ளும்படியாக இருகின்றது.

60  பக்கம் தொடங்கும் " உள்ளத்தில் இருந்து உண்மையாய்  சில உணர்வுகள்...

இதன்கீழ் சொல்லப்பட்ட அனைத்தும் ஒரு மனித மனம் சுமந்த இரணத்தின் வெளிப்பாடு, இந்த சமுதாயம் ஒருவனுக்க அளித்த இரணங்களை தனக்குத்தானே ஜீரணித்து கொள்கின்ற விதம், இதனையும் தாண்டி ஒரு இனமானம் மிக்க மனிதன் தன்னை சார்ந்த சமூக உறவுகளிடத்தில் நோக்கும் எதிர்பார்ப்பு என முடிகின்றது.

கவித்துவம் நிறைந்த சொல்லாடல், உண்மையை சமூக எதார்த்த நிகழ்வோடு கனமாக பதிவு செய்து இருக்கும் விதம் என அனைத்தும் அருமை.

அரசியல் வழக்குகளில் தடா சட்டம் என்பது ஒரு விதமான சர்வாதிகாரமுறை என்பதை மிகவும் தெளிவாக சொல்லப்பட்டிருக்கின்றது

உண்மையில் இந்த புத்தகம் படித்த இரவு எனக்குள் ஏற்ப்பட்ட உளவியல் மாற்றத்தை சொல்லமுடியவில்லை.

படித்து முடித்த நேற்று இரவு கண்ணீர் சுமந்த எனது கண்கள் உறங்க மறுத்து விட்டது. சோகம் சுமந்த எனது இதயம், அதன் கட்டுபாட்டில் செயல்படும் வயிறு உணவு உன்ன மறுத்துவிட்டது. உண்மையில் 2009  இறுதி யுத்தத்தின்போது எனது ஆராய்ச்சி மாணவர் விடுதியில் எனது கையறு நிலையை நினைத்து, எனது கண்ணத்தில் நானே  அறைந்துகொண்ட நிகழ்வு நேற்று என்கண்முன் நின்றது.   பசியின் சோர்வையும், கண்ணின் சோகத்தையும் எனது தூக்கம் வெல்வதற்கு விடியல்காலம் ஆகிவிட்டது.

இந்த புத்தகம் அவசியம் தமிழகம் முழுதும் பரவேண்டும். கண்டிப்பாக இந்த புத்தகம் படிப்பவரிடம் ஒரு உளவியல் மாற்றத்தை உருவாக்கும்.


விடுதலைக்கு விலங்கு புத்தகத்திலிருந்து....


இந்த பரந்துபட்ட உலகில் எத்தனையோ கோடி மக்கள் வாழ்கின்றார்கள். இந்த உலகின் மூத்த இனமான தமிழ்த் தேசிய இனத்தின் 12 கோடி மக்கள் மானுட வளர்ச்சிக்காகவும் உலக உயர்விற்காகவும் தங்கள் கடமைகளை சிறப்பாக செய்கின்றனர். உலகத்தின் அனைத்து விதமான துயரங்களுக்கும் நாம் துடிக்கிறோம். போராடுகிறோம். ஆனால் நமது துயரம் குறித்து கேட்கக் கூட நாதியில்லை. உலகம் என்றைக்கும் நம்மை கருணையோடு பார்த்ததில்லை. அதன் தொடர்ச்சியாகவே நாங்கள் நிதமும் அடைகின்ற துயரங்களும், நியாயமற்ற நீண்ட சிறைவாசமும் உலகத்தின் பார்வைக்கு இதுவரை வந்ததில்லை. இந்த நேரத்தில் நான் நினைத்து துயரப்பட்டுக் கொள்ளும் செய்தி இருக்கிறது. நான் அடைந்த துயரங்கள் அனைத்தையும் தாண்டி எம் இனம் அடைந்த துயரங்களைப் பற்றி நான் பேசத் துணிந்த்தற்குக் காரணம் எம் துயரங்களுக்கும், எம் இனத்தின் துயரங்களுக்கும் முடிவாக இருக்கின்ற காரணங்களின் ஒற்றுமையேத் தவிர வேறல்ல.

என்னை சூழ்ந்திருக்கும் இந்த சுவர்களைத் தாண்டி… இந்த கரிய சிறையின் வழுவான மேற்கூரையைத் தாண்டி ஒரு வானம் இருக்கிறது. அந்த வானம் தான் இந்த நொடியில் என் தாய் நிலத்தையும் நான் வசிக்கின்ற இந்த நிலத்தையும் ஒருசேர பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த வானம்தான் என்னையும் என் தாய் நிலத்தில் வசிக்கின்ற எனது மகன், எனது தாய், எனது மனைவி மற்றும் உற்றார் உறவினர் ஆகியோரை இனைக்கின்ற ஒரேத் தொடர்பாக இருக்கிறது. அந்த வானத்தைத்தான் நான் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் பார்த்துக் கொண்டு எனக்கு நானே ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

என் ஆழ் மனதின் ஏக்கமாக என் தாய் நிலமும், எனது உறவுகளும் இருக்கின்றார்கள். எனக்கென்று உங்களிடம் பகிர்ந்துகொள்ள ஒரு கனவு இருக்கிறது. நானும் ஒரு நாள் என் நிலத்திற்கு திரும்புவேன். மணலோடும் என் கடற்கரையில் காலார நடப்பேன். நிலா பொழுதுகளில் நாள் பால்யத்தில் விளையாடிய என் வீதிகளில் நான் நடந்துத் திரிவேன். உடலெங்கும் என் தாய் நிலத்தின் மண்ணை குழைத்து பூசிக் கொண்டு வெற்றுடம்போடு எம் நிலத்தில் கிடப்பேன். கனவு மெய்படும் பொழுதில்தான் நான் முதல்முதலாக சிரிப்பேன்.

உண்மையாய் சொல்கிறேன் உறவுகளே… தாய் மண்ணின் மீதான பற்றுதான், என்றாவது ஒருநாள் நான் என் நிலத்திற்குத் திரும்புவேன் என்ற நம்பிக்கைதான் என்னை இத்தனைத் துயரங்களைத் தாண்டியும் உயிருடன் வைத்திருக்கின்றன.

தாயக உறவுகளை நம்பி வந்த பிள்ளை நான். ஈழத்தமிழர்களாகிய நாங்கள் எப்போதும் சார்ந்திருப்பது இந்த மண்ணில் வாழக்கூடிய எம் தாய்தமிழ் உறவுகளைத்தான். அவர்கள் தான் நாங்கள் துயருறும் போதெல்லாம் துடித்தார்கள். எமக்கும், அவர்களுக்கும் மரபணு தொடர்ச்சியாக உறவு உண்டு. தொப்புள் கொடி பந்தம் உண்டு. உடன் பிறந்தவர்கள் நாங்கள். தமிழ் அன்னையின் கருப்பையில் தரித்த இரு குழந்தைகள் நாங்கள். ஈழ மக்களின் சிந்தனையும், தாயகத் தமிழர்களின் சிந்தனையும் ஒரே தன்மையை உடையன. பண்பாடும், பழக்கவழக்கங்களும் பிரித்துப் பார்க்க முடியாத அளவிற்கு ஒற்றுமைத் தன்மை வாய்ந்தவை. இங்கு திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்களுக்காக எம் நிலத்தில் உயிரையேக் கொடுக்கவும் ரசிகர்கள் இருந்தார்கள். வானொலியில் ஒளிபரப்பப்படும் தமிழ் திரைப்படங்களின் பாடல்கள் எம் நிலத்தை சதா தாலாட்டிக் கொண்டே இருந்தன. காதலையும் வீரத்தையும் பேசிய தமிழ் திரைப்படங்களின் ஆதிக்கம் எம் மண்ணில் மிக அதிகம். ஈழ தமிழ் இனத்திற்காக சிந்தித்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மீது தீவிரமான விசுவாசம் கொண்ட பலரை எம் நிலத்தில் பார்க்க இயலும். ஈழத் தமிழராகிய எங்களுக்கு கடலின் மறு திசையில் வாழுகின்ற எம் தாயக தமிழ் உறவுகளின் மீது மிகுந்த பற்றும் நம்பிக்கையும் உண்டு. நாங்கள் கீழே விழுந்தால் பாய்ந்து வரும் கரமாக எம் தாயக உறவுகள் இருப்பார்கள் என எனக்கெல்லாம் எனது பிறப்பில் தெளிக்கப்பட்ட நம்பிக்கையாகும். என்னையும் எனது தாயக உறவுகளையும் பிரிப்பது நடுவில் ஓடுகின்ற கடல் மட்டுமேத் தவிர உணர்வல்ல. எம்மோடு உதிரமாய் உணர்வாய் உலகமாய்க் கட்டுண்டு கிடப்பவர்கள் எமது தாயக தமிழர்கள்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக ஈழ நிலத்தில் நடந்த பெரும் யுத்தத்தில் எமது மக்கள்   சிக்குண்டு துன்ப்பபட்டுக் கிடக்கையில் அது தாங்காது தன்னுயிர் தந்து தடுத்திட துடித்த எம் அருமை சகோதரன் முத்துக்குமாரை நான் இந்த நேரத்தில் கண் கலங்க நினைவு கூர்கிறேன். அவன் மரித்துக் கொண்ட இரவில் நான் அழுத கண்ணீர் உண்மையில் செந்நீர். எப்பேர்பட்ட தியாக மனது அவனிற்கு. நினைத்தாலே சிளிர்க்கிறது. ஈழத் தமிழர்களும் தாயகத் தமிழர்களும்பிரிக்க முடியாத தொப்புள் கொடி உறவுகள் தான் என உலகிற்கு உரக்கச் சொன்னவன் முத்துக்குமார். அவனளித்த உயிர் ஈகைதான் தமிழினத்தின் இரு பெரும் தாயக நிலங்களாக ஈழமும் தாயகத் தமிழகமும் கொண்டுள்ள உறவையும் நெருக்கத்தையும் உலகத்தின் கண்களுக்கு திரையிட்டுக் காட்டின.

எம் தாயகத் தமிழர்களுக்கு இத்தனை ஆண்டுகாலம் உங்களையே நம்பி வந்த ஒரு தமிழ் மகன் சிறைக்குள்ளே கொடிய வாதையில் சிக்கிக் கொண்டு தவிக்கிறேன். நான் மட்டுமல்ல, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கின்ற அனைவருக்காகவும் நான் இங்கே பேசிக் கொண்டிருக்கிறேன். எங்களையெல்லாம் காணவரும் பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மா, நளினியின் தாயார் பத்மா அம்மா, ரவி அம்மா போன்ற தாய்மார்களின் முகத்தில் என்னை காணத்துடித்துக் கொண்டிருக்கும் என் தாயின் சோகத்தைக் காண்கிறேன். குற்றமேதும் செய்யாத மகன்களை பெற்றெடுத்ததைத் தவிர எம் தாய்மார்கள் வேறு எந்த குற்றமும் செய்ததில்லை. நீண்ட அவர்களது துயரம் ஒரு முடிவிற்கு வந்தாக வேண்டும். காலம் கடந்து வரும் முடிவென்றாலும் அது உடனேக் கிடைத்தாக வேண்டும். அது மரணமாக இருந்தாலும் கூட. எங்களால் வாழ்விற்கும் சாவிற்கும் நடுவே ஊசலாட இனியும் முடியாது.

அன்பார்ந்த தமிழர்களே! சிறை என்பது தனி மனிதனின் சுதந்திதரத்தை மட்டும் முடக்கிப் போடும் அறையல்ல. மாறாக அவனது உணர்வுகளுக்குள் ஆழமாக ஊடுருவி ஒரு மனிதனின் இயல்பிலேயே கடுமையான தாக்கத்தை ஏற்படுத்திடும் ஆழமான பாதிப்பிற்குப் பெயர்தான் சிறை என்பதை நாங்கள் எங்கள் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறோம். வரையரையற்ற முடிவிலியான இந்த நீண்ட நெடிய சிறை எங்களுக்கு மிகப் பெரிய காயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆழ்ந்த மௌனங்களில் கட்டுண்டு கிடக்கிற நாங்கள் கடுமையான உளவியல் சிக்கல்களுக்கு உள்ளாகி இருக்கிறோம். கரைந்து கொண்டிருக்கின்ற ஒவ்வொரு நொடியும் கூட எங்களுக்கு வருடமாய்க் கடக்கின்றன. மிக மெதுவாக நத்தைப் போல சுமையோடு நகரும் பகல் பொழுது, அதையும் தாண்டி துளி துளியாய் கசியும் இரவுப் பொழுது என எம் துயரங்களுக்கு பகலிரவு பேதமில்லை. நாட்கள் நகர்ந்து கொண்டே இருக்கின்றன எமக்கு உணர்த்த சிறையில் மாட்டப்பட்டிருக்கும் நாட்காட்டியைத் தவிர வேற எந்த அடையாளமும் இல்லை. நான் சிறைபட்ட பொழுதில் குழந்தையாக இருந்த எனது மகன்  நன்கு வளர்ந்த வாலிபனாக என்னைப் பார்க்க வந்த போதுதான் நான் இழந்தவையெல்லாம் என் நினைவிற்கு வந்தன.

விடுதலைக்கு விலங்கு புத்தகத்தின் முகப்பு அட்டை.