Tuesday, May 24, 2011

விடுதலைக்கு விலங்கு புத்தகத்திலிருந்து....


இந்த பரந்துபட்ட உலகில் எத்தனையோ கோடி மக்கள் வாழ்கின்றார்கள். இந்த உலகின் மூத்த இனமான தமிழ்த் தேசிய இனத்தின் 12 கோடி மக்கள் மானுட வளர்ச்சிக்காகவும் உலக உயர்விற்காகவும் தங்கள் கடமைகளை சிறப்பாக செய்கின்றனர். உலகத்தின் அனைத்து விதமான துயரங்களுக்கும் நாம் துடிக்கிறோம். போராடுகிறோம். ஆனால் நமது துயரம் குறித்து கேட்கக் கூட நாதியில்லை. உலகம் என்றைக்கும் நம்மை கருணையோடு பார்த்ததில்லை. அதன் தொடர்ச்சியாகவே நாங்கள் நிதமும் அடைகின்ற துயரங்களும், நியாயமற்ற நீண்ட சிறைவாசமும் உலகத்தின் பார்வைக்கு இதுவரை வந்ததில்லை. இந்த நேரத்தில் நான் நினைத்து துயரப்பட்டுக் கொள்ளும் செய்தி இருக்கிறது. நான் அடைந்த துயரங்கள் அனைத்தையும் தாண்டி எம் இனம் அடைந்த துயரங்களைப் பற்றி நான் பேசத் துணிந்த்தற்குக் காரணம் எம் துயரங்களுக்கும், எம் இனத்தின் துயரங்களுக்கும் முடிவாக இருக்கின்ற காரணங்களின் ஒற்றுமையேத் தவிர வேறல்ல.

என்னை சூழ்ந்திருக்கும் இந்த சுவர்களைத் தாண்டி… இந்த கரிய சிறையின் வழுவான மேற்கூரையைத் தாண்டி ஒரு வானம் இருக்கிறது. அந்த வானம் தான் இந்த நொடியில் என் தாய் நிலத்தையும் நான் வசிக்கின்ற இந்த நிலத்தையும் ஒருசேர பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த வானம்தான் என்னையும் என் தாய் நிலத்தில் வசிக்கின்ற எனது மகன், எனது தாய், எனது மனைவி மற்றும் உற்றார் உறவினர் ஆகியோரை இனைக்கின்ற ஒரேத் தொடர்பாக இருக்கிறது. அந்த வானத்தைத்தான் நான் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் பார்த்துக் கொண்டு எனக்கு நானே ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

என் ஆழ் மனதின் ஏக்கமாக என் தாய் நிலமும், எனது உறவுகளும் இருக்கின்றார்கள். எனக்கென்று உங்களிடம் பகிர்ந்துகொள்ள ஒரு கனவு இருக்கிறது. நானும் ஒரு நாள் என் நிலத்திற்கு திரும்புவேன். மணலோடும் என் கடற்கரையில் காலார நடப்பேன். நிலா பொழுதுகளில் நாள் பால்யத்தில் விளையாடிய என் வீதிகளில் நான் நடந்துத் திரிவேன். உடலெங்கும் என் தாய் நிலத்தின் மண்ணை குழைத்து பூசிக் கொண்டு வெற்றுடம்போடு எம் நிலத்தில் கிடப்பேன். கனவு மெய்படும் பொழுதில்தான் நான் முதல்முதலாக சிரிப்பேன்.

உண்மையாய் சொல்கிறேன் உறவுகளே… தாய் மண்ணின் மீதான பற்றுதான், என்றாவது ஒருநாள் நான் என் நிலத்திற்குத் திரும்புவேன் என்ற நம்பிக்கைதான் என்னை இத்தனைத் துயரங்களைத் தாண்டியும் உயிருடன் வைத்திருக்கின்றன.

தாயக உறவுகளை நம்பி வந்த பிள்ளை நான். ஈழத்தமிழர்களாகிய நாங்கள் எப்போதும் சார்ந்திருப்பது இந்த மண்ணில் வாழக்கூடிய எம் தாய்தமிழ் உறவுகளைத்தான். அவர்கள் தான் நாங்கள் துயருறும் போதெல்லாம் துடித்தார்கள். எமக்கும், அவர்களுக்கும் மரபணு தொடர்ச்சியாக உறவு உண்டு. தொப்புள் கொடி பந்தம் உண்டு. உடன் பிறந்தவர்கள் நாங்கள். தமிழ் அன்னையின் கருப்பையில் தரித்த இரு குழந்தைகள் நாங்கள். ஈழ மக்களின் சிந்தனையும், தாயகத் தமிழர்களின் சிந்தனையும் ஒரே தன்மையை உடையன. பண்பாடும், பழக்கவழக்கங்களும் பிரித்துப் பார்க்க முடியாத அளவிற்கு ஒற்றுமைத் தன்மை வாய்ந்தவை. இங்கு திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்களுக்காக எம் நிலத்தில் உயிரையேக் கொடுக்கவும் ரசிகர்கள் இருந்தார்கள். வானொலியில் ஒளிபரப்பப்படும் தமிழ் திரைப்படங்களின் பாடல்கள் எம் நிலத்தை சதா தாலாட்டிக் கொண்டே இருந்தன. காதலையும் வீரத்தையும் பேசிய தமிழ் திரைப்படங்களின் ஆதிக்கம் எம் மண்ணில் மிக அதிகம். ஈழ தமிழ் இனத்திற்காக சிந்தித்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மீது தீவிரமான விசுவாசம் கொண்ட பலரை எம் நிலத்தில் பார்க்க இயலும். ஈழத் தமிழராகிய எங்களுக்கு கடலின் மறு திசையில் வாழுகின்ற எம் தாயக தமிழ் உறவுகளின் மீது மிகுந்த பற்றும் நம்பிக்கையும் உண்டு. நாங்கள் கீழே விழுந்தால் பாய்ந்து வரும் கரமாக எம் தாயக உறவுகள் இருப்பார்கள் என எனக்கெல்லாம் எனது பிறப்பில் தெளிக்கப்பட்ட நம்பிக்கையாகும். என்னையும் எனது தாயக உறவுகளையும் பிரிப்பது நடுவில் ஓடுகின்ற கடல் மட்டுமேத் தவிர உணர்வல்ல. எம்மோடு உதிரமாய் உணர்வாய் உலகமாய்க் கட்டுண்டு கிடப்பவர்கள் எமது தாயக தமிழர்கள்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக ஈழ நிலத்தில் நடந்த பெரும் யுத்தத்தில் எமது மக்கள்   சிக்குண்டு துன்ப்பபட்டுக் கிடக்கையில் அது தாங்காது தன்னுயிர் தந்து தடுத்திட துடித்த எம் அருமை சகோதரன் முத்துக்குமாரை நான் இந்த நேரத்தில் கண் கலங்க நினைவு கூர்கிறேன். அவன் மரித்துக் கொண்ட இரவில் நான் அழுத கண்ணீர் உண்மையில் செந்நீர். எப்பேர்பட்ட தியாக மனது அவனிற்கு. நினைத்தாலே சிளிர்க்கிறது. ஈழத் தமிழர்களும் தாயகத் தமிழர்களும்பிரிக்க முடியாத தொப்புள் கொடி உறவுகள் தான் என உலகிற்கு உரக்கச் சொன்னவன் முத்துக்குமார். அவனளித்த உயிர் ஈகைதான் தமிழினத்தின் இரு பெரும் தாயக நிலங்களாக ஈழமும் தாயகத் தமிழகமும் கொண்டுள்ள உறவையும் நெருக்கத்தையும் உலகத்தின் கண்களுக்கு திரையிட்டுக் காட்டின.

எம் தாயகத் தமிழர்களுக்கு இத்தனை ஆண்டுகாலம் உங்களையே நம்பி வந்த ஒரு தமிழ் மகன் சிறைக்குள்ளே கொடிய வாதையில் சிக்கிக் கொண்டு தவிக்கிறேன். நான் மட்டுமல்ல, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கின்ற அனைவருக்காகவும் நான் இங்கே பேசிக் கொண்டிருக்கிறேன். எங்களையெல்லாம் காணவரும் பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மா, நளினியின் தாயார் பத்மா அம்மா, ரவி அம்மா போன்ற தாய்மார்களின் முகத்தில் என்னை காணத்துடித்துக் கொண்டிருக்கும் என் தாயின் சோகத்தைக் காண்கிறேன். குற்றமேதும் செய்யாத மகன்களை பெற்றெடுத்ததைத் தவிர எம் தாய்மார்கள் வேறு எந்த குற்றமும் செய்ததில்லை. நீண்ட அவர்களது துயரம் ஒரு முடிவிற்கு வந்தாக வேண்டும். காலம் கடந்து வரும் முடிவென்றாலும் அது உடனேக் கிடைத்தாக வேண்டும். அது மரணமாக இருந்தாலும் கூட. எங்களால் வாழ்விற்கும் சாவிற்கும் நடுவே ஊசலாட இனியும் முடியாது.

அன்பார்ந்த தமிழர்களே! சிறை என்பது தனி மனிதனின் சுதந்திதரத்தை மட்டும் முடக்கிப் போடும் அறையல்ல. மாறாக அவனது உணர்வுகளுக்குள் ஆழமாக ஊடுருவி ஒரு மனிதனின் இயல்பிலேயே கடுமையான தாக்கத்தை ஏற்படுத்திடும் ஆழமான பாதிப்பிற்குப் பெயர்தான் சிறை என்பதை நாங்கள் எங்கள் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறோம். வரையரையற்ற முடிவிலியான இந்த நீண்ட நெடிய சிறை எங்களுக்கு மிகப் பெரிய காயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆழ்ந்த மௌனங்களில் கட்டுண்டு கிடக்கிற நாங்கள் கடுமையான உளவியல் சிக்கல்களுக்கு உள்ளாகி இருக்கிறோம். கரைந்து கொண்டிருக்கின்ற ஒவ்வொரு நொடியும் கூட எங்களுக்கு வருடமாய்க் கடக்கின்றன. மிக மெதுவாக நத்தைப் போல சுமையோடு நகரும் பகல் பொழுது, அதையும் தாண்டி துளி துளியாய் கசியும் இரவுப் பொழுது என எம் துயரங்களுக்கு பகலிரவு பேதமில்லை. நாட்கள் நகர்ந்து கொண்டே இருக்கின்றன எமக்கு உணர்த்த சிறையில் மாட்டப்பட்டிருக்கும் நாட்காட்டியைத் தவிர வேற எந்த அடையாளமும் இல்லை. நான் சிறைபட்ட பொழுதில் குழந்தையாக இருந்த எனது மகன்  நன்கு வளர்ந்த வாலிபனாக என்னைப் பார்க்க வந்த போதுதான் நான் இழந்தவையெல்லாம் என் நினைவிற்கு வந்தன.

No comments:

Post a Comment